உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றம்
உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தாிசனம்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடற்கரையில் அமைந்துள்ளது உவரி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சிவஸ்தலமும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியாக அருள் பாலித்து வருகின்றாா். அம்பிகை மனோன்மணி அம்பாள்.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. குறிப்பாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி உதயமார்த்தாண்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நவ கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி சந்திரசேகரா் மனோன்மனி அம்பாள் அலங்கார மண்டபத்திற்க ஏழுந்தருளியதும் கொடிபட்டமானது யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது .
தொடா்ந்து கொடிமரத்திற்கும் கொடிபட்டத்திற்கும் பூஜைகள் நடைபெற்று மகர லக்னத்தில் காலை 6.00 – 7.30 க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் கொடிமரத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாக்காலங்களில் தினமும் காலையில் விநாயகர் மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறுகிறது. வரும் 11 ம்தேதி தேரோட்டமும் மறுநாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.