in

மின்சார கம்பி அறுந்து விழுந்ததை எதிர்பாராத விதமாக மிதித்த பெண்

மின்சார கம்பி அறுந்து விழுந்ததை எதிர்பாராத விதமாக மிதித்த பெண்

 

திருவாடானை அருகே வீட்டின் முன்பு மின்சார கம்பி அறுந்து விழுந்ததை எதிர்பாராத விதமாக மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜான்சிராணி (37) இவருக்கு ஆறுமுகம் என்ற கணவரும், 9 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஜான்சிராணி இன்று அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பு பசுமாட்டினை அவிழ்க்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜான்சிராணி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தொண்டி காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்சிராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மின்சார கம்பிகள் சேதமடைந்து பல நாட்களாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி பலியானதால் குடும்பத்தாரும், கிராமத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

What do you think?

திருவாடானை அருகே கிணற்றில் மிகுந்த மூதாட்டியின் உடல் போலீசார் விசாரணை

ஸ்ரீ அன்னை பிறந்த தினம். அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் ..