கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு திடலின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் உடைப்பு
கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு திடலின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் உடைப்பு: தடுக்கச் சென்ற ஏ.டி.எஸ்.பி தலையில் கொடிக்கம்பம் விழுந்து படுகாயம்: போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசிகவினரிடம் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி காவல்துறையினர் கொடிக்கம்பத்தை நட்டனர்.
கும்பகோணத்தில் தாராசுரம் புறவழிச்சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாநாட்டு திடலின் அருகே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை உடைத்து கீழே தள்ளினர். அப்போது அதனை தடுக்கச் சென்ற ஏ.டி.எஸ்.பி தலையில் கொடிக்கம்பம் விழுந்ததால் ஏ.டி.எஸ்.பி காயமடைந்தார். இதையடுத்து அவரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவளவன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடிக்கம்பத்தை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினரே கொடி கம்பத்தை சரி செய்து நட்டனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக வந்து கொடிகம்பத்தை பார்வையிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.