காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தொகுதி மறு வரைவு மற்றும் மும்மொழி கொள்கையை தென்னிந்தியாவில் அமுல்படுத்துவதற்கு புதுச்சேரி நுழைவு வாயிலாக உள்ளது-காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி குற்றச்சாட்டு
தொகுதி மறு வரைவு குறித்த தமிழகத்தின் அனைத்து கட்சி கூட்ட முடிவுக்கு ரங்கசாமி ஆதரவளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி..
நாடாளுமன்ற தொகுதிகள் மறு வரைவு செய்யப்படும் என்ற மத்திய அரசின் முடிவால் தென்மாநிலங்களை முழுமையாக பாதிக்கும், இந்த முடிவிற்கு புதுச்சேரி அரசு ஒருபோதும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்தினார்.
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறு வரைவு போன்ற திட்டங்களை தென் மாநிலங்களில் செயல்படுத்துவதற்கு புதுச்சேரி அரசு நுழைவு வாயிலாக உள்ளது என்று குற்றம் சாட்டிய வைத்திலிங்கம் தொகுதி மறு வரைவு குறித்த தமிழகத்தின் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுகளுக்கு ரங்கசாமி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்ற மறு வரைவு மற்றும் மும்மொழி கொள்கை இவை இரண்டையும் எதிர்த்து தமிழகம் போராடி வருகிறது இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக உள்ளன. ஆனால் புதுச்சேரியில் இந்த இரண்டுக்குமே முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவாக உள்ளார் என்று குற்றம் சாட்டிய வைத்திலிங்கம்.. சமீபத்தில் தொடங்கிய விஜய் கட்சி கூட இந்த இரண்டு கொள்கையில் மாறுபட்டு இருக்கிறார்கள் என்றும் சுட்டி காட்டினார்.
மும்மொழிக் கொள்கை எவ்வாறு புதுச்சேரியில் திணிக்கப்பட்டதோ அது போன்று வடமாநில கொள்கைகளும் புதுச்சேரியில் திணிக்கப்படலாம் என்று அச்சம் தெரிவிக்க அவர்… தென் மாநிலங்களின் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வடமாநிலத்திற்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, போன்ற மாநிலங்கள் ஒன்றாக இருக்கும்போது புதுவை மட்டும் தனியாக இருந்தால் நம்மை நாமே காட்டிக் கொடுப்பதாகும், நாமும் தென் மாநிலங்களில் தான் உள்ளோம் என்பதனை ரங்கசாமி மறந்து விடக்கூடாது, எனவே தொகுதி மறு வரைவு மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் தமிழகத்தின் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயவுசெய்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.