சிதம்பரம் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகை
சிதம்பரம் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் 50 பேர் கைது. போலீசாருடன் வாக்குவாதம், தள்ளமுள்ளு. வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர்.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், அதனால் இந்த கடையை அகற்ற வேண்டும் எனவும் பலரும் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை கடை அகற்றப்படவில்லை.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
பாஜகவின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் ஒன்று திரண்ட அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் திடீரென பஸ் நிலையத்திற்குள் புகுந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதையடுத்து பாஜகவினர் பஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.