கீழச்சிவந்திபுரம் சிரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள கீழச்சிவந்திபுரம் சிரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி சந்தக்குட ஊர்வலமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
கீழச்சிவந்திபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான விழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், உகப்படிப்பு பணிவிடை நடைபெற்றது. 7ஆம் திருநாளில் நாராயண சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடினார். 8ஆம் திருநாளில் ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளினார்.
9ஆம் திருநாளில் இன்று சிவந்திபுரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசத்திற்கு சந்தனக்குடம் எடுத்து வர பக்தர்களுடன் சுவாமி சென்றார். பாபநாசத்தில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், சந்தனக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மீண்டும் சிவந்திபுரத்திற்கு வந்தனர்.
சண்டைமேளம் இசைத்தும் வந்ததை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்தனர். சந்தனக்குடம் கோயிலை அடைந்ததும் உச்சிப்படிப்பு பணிவிடை நடைபெற்றது.
மதியம் சுமார் 5000 திற்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் இரவில் நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த விழாவில் சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி, அடையக்கருங்குளம், விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரம், வராகபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.