in

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா பச்சை சாத்தி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா பச்சை சாத்தி

 

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 8-ம் திருநாளை முன்னிட்டு சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசி திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக. தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் தனித்தனியே எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

பச்சை சாத்தியை முன்னிட்டு சுவாமி சண்முகர் , வள்ளி தெய்வானை அம்பாளுக்கு பால், பழம் , பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், சந்தனம், மாபொடி , மஞ்சள் பொடி , மற்றும் இளநீர் உள்ளிட்ட 36 வகையான வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று ஆறுமுக தீபாராதனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை நிறப் பட்டுடுத்தி பச்சை நிற மலர்களால் அலங்கரித்து பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோசத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

What do you think?

கீழச்சிவந்திபுரம் சிரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா

கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்