பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொறிதல் ரத ஊர்வலம்
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொறிதல் ரத ஊர்வலம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த மார்ச்.4 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் மாரியம்மன் கோயில் முன்பாக சிறப்பு அம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை இரவு 36வது ஆண்டாக பூச்சொறிதல் ரதஊர்வலம் நடைபெற்றது. அடிவாரம் பாதவிநாயகர் கோயில் முன்பு துவங்கிய ஊர்வலத்தை கந்தவிலாஸ் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் குத்துவிளக்கேற்றி மலர்தூவி துவக்கி வைத்தனர்.
பலவண்ண மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பூச்சொறிதல் ரதத்தின் பக்கவாட்டிலும், பின்பகுதியிலும் அம்பாளின் பல்வேறு அவதாரங்கள் வடிக்கப்பட்டிருந்தது.
தேரின் உள்ளே அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு மங்கள மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூச்சொறிதல் ரத ஊர்வலம் சன்னதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடை வீதி வழியாக அருள்மிகு மாரியம்மன் கோயிலை அடைந்து நிறைவு பெற்றது.
தேரின் முன்பாக செண்டை மேளம், நாதஸ்வரம், தவில் என மேளதாளங்கள் முழங்கியபடி சென்றது. வழிநெடுக தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. வரும் மார்ச்.14ம் தேதி அன்னதான பொதுவிருந்தும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் மூர்த்தி, நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.