மாசி மகத்தை முன்னிட்டு மகாமகத் திருக்குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர்
கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நன்நாளில் மாசி மக விழா தீர்த்தவாரி, 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவத் திருத்தலங்கள் என 17 திருக்கோயில்களில் இவ்விழா ஒரு சேர நடைபெறும்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் ஆண்டில் வரும் மாசி மாத மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் மகாமகப் பெருவிழா நடைபெறும் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது அடுத்த மகாமகம் 2028இல் நடைபெறும்
மகாமக பெருமை கொண்ட கும்பகோணம் மாநகரில் மாசிமக பெருவிழாவின் தொடக்கமாக, காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய 5 சைவத் திருத்தலங்களில் கடந்த 03 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏனைய ஆறு தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது
அதுபோலவே சக்கரபாணி, ஆதிவராகப்பெருமாள் மற்றும் ராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணவத் தலங்களில் கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏனைய இரு கோயில்களில் இவ்விழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் நாளான மாசி மகத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மகாமகத் திருக்குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர் மேலும் முன்னோர்களளின் ஆசி வேண்டி புரோகிதர்களிடம் திதி மற்றும் தர்பணம் அளித்து அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
நண்பகல் 12 மணி அளவில் 12 சிவாலயங்களில் இருந்து உற்சவர் சாமிகள் ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள அஸ்திர தேவருக்கு அபிஷேக ஆராதனை செய்த பிறகு மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெறும்.
இதேபோன்று வைணவத் தலங்கள் 5ல் இருந்து உற்சவர் பெருமாள் காவேரிக் கரையின் சர்க்கரை படித்துறைக்கு மாலை எழுந்தருள அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது மேலும் விழாவினை யொட்டி பொற்றாமரைக் குளத்திற்கு சாரங்கபாணி சுவாமி எழுந்தருள தெப்போற்சவம் நடைபெறுகிறது.