மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பௌர்ணமி தின திருவிளக்கு சிறப்பு பூஜை
108 பெண்கள் பூஜையில் பங்கேற்று மனமுருகி சாமி தரிசனம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.
இத்திருக்கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை மாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உற்சவர் அங்காளம்மன் பூக்களாலும் தங்க ஆபரண நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு குறத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வந்த நிலையில் பின்னர் மேல தாளங்கள் முழங்க அங்காளம்மனை திருவிளக்கு பூஜை நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்து சென்று அம்மனுக்கு படையல் இட்டு பூசாரிகள் மந்திரங்கள் முழங்க 108 பெண்கள் ஒரே சீருடை உடன் அங்காளம்மன் முன்பு திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
அச்சமயம் மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை காட்டப்பட்டது பின்னர் அம்மனுக்கு பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாடிய போது பெண்கள் தீபமேற்றி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலை துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.