காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், வருடாந்திர ஆய்வு
கும்பகோணத்தில் தாலுக்கா காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு பற்றாக்குறை உள்ள காவல் நிலையங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கும்பகோணத்தில் தாலுக்கா காவல் நிலையத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ஜியாவுல் ஹக், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நிலுவை வழக்குகள் விவரம், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், கொலை, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களின் விவரம், வருகைப் பதிவேடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, காவல் நிலையங்களுக்குள் தூய்மையைப் பேணுவதன் அவசியத்தையும் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறையாக வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்புகளைப் பின்பற்றி பராமரிக்க ஊக்குவித்தல், சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல் மூலம் கண்காணிப்பின் முக்கியத்துவத்தையும் குறித்து டிஐஜி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய டிஐஜி ஜியாவுல் ஹக், பெண்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து பள்ளிகளிலும் காவலர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.
போக்குவரத்து சீர் செய்ய கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவலர்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதில் உதவி கண்காணிப்பாளர் அங்கித் சிங், காவல்துறை ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி, ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.