முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஆதார் அட்டை பெற முடியாமல் தவித்த சிறுவன்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஆதார் அட்டை பெறமுடியாமல் தவிக்கும் சிறுவன். மற்றவர்களை போல சிறுவனின் முகத்தை மலரச்செய்வாரா தமிழக முதல்வர்.? கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சர்கத் பேகம் காஜா நஜமுதீன் தம்பதியினருக்கு 2 மகன் உள்ளனர். இவரது இளைய மகன் 11 வயதான முகமது ஆதிஃப் ஒன்ற வயதிலிருந்து முகத்தில் சிறிய அளவு கொழுப்பு கட்டி தோன்றியிருந்திருக்கிறது. சாதாரண கொழுப்பு கட்டி தான் என்று சிகிச்சை பெற்ற நிலையில் சிறுவனுக்கு பாதிப்பு குறையவில்லை. நாளடைவில் கொழுப்பு கட்டி பெரிதாகி சென்ற நிலையில் முக சிதைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் 11 வயது சிறுவனின் ஒருபக்க முகம் முழுவதும் சிதையத் தொடங்கியது. இதனால் சிறுவனுக்கு ஊரிலும், பள்ளியிலும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. தன்னுடன் அமர்ந்து யாரும் உணவு கூட உட்கொள்வதில்லை, தன்னிடம் நண்பர்களாக யாரும் பழகுவதில்லை என்கின்ற மன வேதனையில் அச்சிறுவன் மட்டுமின்றி அவரது குடும்பமே பல பிரச்னைகளை, இன்னல்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளியில் தற்பொழுது ஆதார் புதுப்பித்துக் கொண்டு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் சூழலில் இச்சிறுவனுக்கு ஆதார் எடுக்க இவரது பெற்றோர்கள் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 3 வயதில் எடுக்கப்பட்ட ஆதார் அட்டை புதுப்பிக்க முயலும் போது முகச் சிதைவு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்த நிலையில் தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று ஆதார் எடுக்க முயற்சிக்கும் பொழுது மதுரை அலுவலகத்திற்கு சென்று ஆதார் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்திற்கு வந்து ஆதார் எடுக்க முயற்சிக்கும் பொழுது பெங்களூரில் உள்ள ஆதார் தலைமை மையத்திற்கு சென்று ஆதார் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்கு தற்பொழுது ஆதார் தேவைப்படும் சூழலில் ஆதார் கிடைக்கப்பெறாததால் குடும்பமே ஊர் ஊராக ஆதார் கார்டு எடுப்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, அச்சிறுவன் உட்பட அந்த குடும்பமே உளவியல் தாக்குதலையும், மனநெருக்கடியையும் சந்தித்திருந்த நிலையில் அவர் தனது படிப்பையே தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடியைச் சேர்ந்த சிறுமி டானியாவுக்கு தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு உரிய சிறப்பு சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்கப்பட்டதோ.? அதேபோன்று தனது மகனுக்கும் உரிய சிகிச்சை வழங்கி தனது மகனுக்கும் மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆதார் அட்டை எடுக்க முடியாமல் திணறும் குடும்பத்தினர் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், குடியரசு தின விழாவில் தனது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டியில் சிறப்பாக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுவன் படிப்பிலும், பேச்சு போட்டியிலும் திறமை வாய்ந்தவராக இருந்து வருகிறார். சிறுவன் முகமது ஆதிஃப் வாழ்விலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமா.? மற்றவர்களைப் போன்று சிறுவனின் முகத்தை மலரச் செய்யுமா தமிழக அரசு என்ற ஏக்கத்தில் சிறுவனும், சிறுவனின் குடும்பத்தினரும் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.