மொழிப்போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி. சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராேஜந்திரன் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை. அதிமுக எம்எல்ஏ பாண்டியன், விசிகஎம்எல்ஏ சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோரும் தனித்தனியே மாலை அணிவித்து மரியாதை
இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப் போராட்டத்தில் பங்கு பெற்று ஏராளமான தியாகிகள் தங்களது இன்னுயிரை இழந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் வருடந்தோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவரான ராஜேந்திரன் மொழிப்போராட்டத்தின்போது துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.
இதற்காக அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே ராஜேந்திரன் திருஉருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப் படுவதையொட்டி மொழிப்போராட்ட தியாகி ராஜேந்தின் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிதம்பரம் நகர திமுக செயலாளரும், சிதம்பரம் நகர்மன்றத் தலைவருமான கே.ஆர். செந்தில்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அண்ணாமலைநகரில் உள்ள தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
இதையடுத்து அதிமுகவினர் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏவுமான சிந்தனைச்செல்வன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலைநகருக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.