அரை நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது
அரை நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது.நாள் ஒன்றுக்கு 42 முறை மூடப்படும் ரயில்வே கேட்டால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நிம்மதி பெருமூச்சு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட்டை கடந்து காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் மைசூர் விரைவு ரயில் அதேபோன்று காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் 20 சரக்கு ரயில் என நாள் தோறும் 42 ரயில்கள் செல்கின்றன. இதன் காரணமாக நீடாமங்கலம் ரயில்வே கேட் நாள் ஒன்றுக்கு 42 முறை மூடப்படுகிறது.
இதன் காரணமாக 8 மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்வே கேட்டில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த ரயில்வே கேட் வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி பகுதிகளில் இருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இங்கு சரக்கு ரயிலில் உர மூட்டைகள் வரும்போதும், இங்கிருந்து பிற இடங்களுக்கு நெல் மூட்டைகள் ஏற்றும் போதும் சரக்கு ரயிலின் வேகன்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டு பணிகள் முடிந்த பிறகு வேகன்கள் இணைக்கப்பட்டு ரயில் புறப்படும் அதுவரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும.இதனால் நீடாமங்கலம் பகுதி மக்கள் மட்டுமன்றி இந்த ஊரை கடந்து செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வந்தனர் எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்ட ரூபாய் 170 கோடியில் திட்டம் அறிவித்து பழைய நீடாமங்கலம் பரப்பனாமேடு சித்தமல்லி ஆகிய கிராமங்களில் 2.60 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடாக ரூபாய் 36 கோடியும் வழங்கப்பட்டு விட்டது.
இதன் தொடர்ச்சியாக ரூபாய் 78 கோடியில் மேம்பாலம் கட்ட டெண்டர் அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகி உள்ளது.மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்த உடன் மின் இணைப்பு குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற இதர பணிகள் ரூபாய் 30 கோடியில் மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் போட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட விருப்பதன் காரணமாக தங்களது அரை நூற்றாண்டு கால பிரச்சனை தீர்வுக்கு வரும் என்றும் கடந்த 13 வருடங்களாக இதற்காக வர்த்தக சங்கம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து இதுகுறித்து மக்கள் மன்றத்தில் கோரிக்கை வைத்தும் வந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 23.02.2024 அன்று நடைபெற இருப்பதால் தங்களது நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாகவும் இதற்காக முயற்சி எடுத்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழில் துறை அமைச்சருமான டி.ஆர்.பி ராஜாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.