மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி பெண் ஊழியர் கைகலப்பு
மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான எம் எம் ஆர் அங்காடியில் விதிமுறையை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கடை நடத்தி வந்த ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி பெண் ஊழியர் உள்ளிட்ட மூன்று பேர் மீது தாக்குதல் நடத்தியது கண்டித்து நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான எம்.எம்.ஆர் அங்காடி உள்ளது இதில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், ஒன்பதாம் எண் கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் அபில் என்ற நபர் பாய் வீட்டு கல்யாண விருந்து என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
கடையை வாடகைக்கு எடுத்த அபில் அருகில் உள்ளிருந்த மாடிப்படியை சமையலறையாகவும் மேல் தளத்தில் நகராட்சிக்கு தெரியாமல் சட்டவிரோதமாக தகரக் கொட்டகை அமைத்து பொருட்கள் சேமிக்கும் அறையாகவும் பயன்படுத்தி வந்தார்.
மாடிப்படி என் கீழ்புறத்தில் 30 கடைகளுக்கும் பொதுவான கழிவறை இருந்த நிலையில் அதனை மூடிவிட்டு சமையலறை அமைத்த காரணத்தால் மீதமுள்ள கடைக்காரர்கள் மிகுந்த அவதியுற்று வந்தனர்.
இது தொடர்பாக தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்த நிலையில் ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து நகராட்சி ஆய்வாளர்கள் பிருந்தா முருகராஜ் மற்றும் ஒரு உதவியாளர் கடைக்கு சென்றனர்.
அவர்களைத் தடுத்த கடை உரிமையாளர் அபில் மற்றும் ஊழியர்கள் நகராட்சி பெண் ஊழியர் உள்ளிட்ட 3 பேரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நகராட்சி ஊழியர்கள் நகராட்சி அலுவலகம் வாசலில் பணிகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானம் செய்த காவல்துறை ஆய்வாளர் திருமதி சுப்ரியா சம்பந்தப்பட்ட கடையை ஆய்வு செய்ய சென்றார். அங்கு அபிலுக்கு ஆதரவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் கடை ஊழியர்கள் இணைந்து கச்சேரி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடை உள்ளே ஆய்வுக்கு சென்ற காவல் துறைக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும் வரை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.