தென் மாவட்டத்தில் இருந்தார்கள் என்பதால் அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை உள்ளதே தவிர அவர்கள் இணைந்தால் மீண்டும் குழப்பம் தான் வரும். இரட்டை தலைமை குறித்து பேசினால் குழப்பம் தான் வரும். அவர்கள் சேர்ந்தால் தான் இந்த இயக்கம் வளரும் என்பதற்கு வாய்ப்பே இல்லை.
திமுக என்கிற கூட்டணி கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது – அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரை வரவுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுகவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்:
வருகிற நவம்பர் 7, 8 முகூர்த்த நாள் அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டிக்கு பக்தர்கள் விரதம் இருப்பார்கள் என்பதால் திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதன் துணை கோயில்கள் ஆன சொக்கநாதர் கோவிலில் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ள நிலையில் திருமணத்திற்கு பெயர் போன திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்ய வேண்டும் என்கிற ஆசையுடன் அந்த தேதிகளில் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் செல்வதால், திருமணங்கள் காலை முதல் மதியம் 12 மணிக்குள் முடிந்து விடும் என்பதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், காவல்துறை ஒத்துழைப்புடன், திருமணங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று புதிதாக வந்துள்ள நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
கடந்த சில தினங்களாக திருக்கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது போக்குவரத்துக்கு இடையூறாக அகற்றப்படுவதை நான் வரவேற்கிறேன். இதில் கடைகள் மற்றும் முக்கிய தலைவர்களின் சிலைகள் கூட அகற்றப்பட்டுள்ளது. ஆனால் இதில் சாலையோர வியாபாரிகளும், கோவில் முன்பு பூக்கடை வைத்திருப்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பூக்கடை வைத்திருப்பவர்களுக்கு கோவிலுக்கு முன்பாக சிறிய இடத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் கோவிலில் நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. அதை இந்த அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் முதல்வரிடம் பல திட்டங்களை எடுத்து வைக்கிறோம் ஆனால் அதற்கு பல காரணங்களைச் சொல்லி முதலமைச்சர் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வில்லை. குறிப்பாக விளையாட்டு அரங்கு குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்டதற்கு அனைத்து தொகுதிகளுக்கும் விளையாட்டு அரங்குகள் கட்டப்படும் என உதயநிதி கூறினார். ஆனால் மொத்தம் 10 இடங்களுக்கு மட்டும் விளையாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மேலும் மதுரை திருநகர் பகுதியில் உள்ள ஹாக்கி மைதானத்தை சிந்தட்டிக் காக்கி மைதானமாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளேன். ஆனால் தற்போது வரை துணை முதல்வர் அதற்கு எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உடனடியாக அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வருவதில்லை. வெறும் தகவலாகவே வெளியாகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன நடைபெறுகிறது என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. எனவே அது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன்.
தென்கால் கண்மாய் கரையில் புதிதாக 45 கோடி செலவில் சாலை வேலை நடைபெற்ற வருகிறது. ஆனால் அது குறித்து இந்த விவரங்களையும் அதிகரிகள் எனக்கு தரவில்லை. மேலும் அந்த சாலை போடப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றம் விதமாக அது தெரியவில்லை, சாலை, நடைபாதையை விருப்பத்தில் போட்டுள்ளதால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது அதனுடன் சேர்த்து பாசனத்திற்கு நீர் செல்கின்ற மடையை முழுவதும் அடைத்து விட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் இதை நேரில் ஆய்வு செய்தார்கள் ஆனால் அந்த ஆய்வின்படி வேலைகள் நடந்துள்ளதா? மேலும் கண்மாய்களில் எடுக்கப்படும் மண்கள் கடத்தப்படுவதாகவும் அது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மீது பொதுப்பணித்துறை வழக்கு தொடுத்து, அந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே மண் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதா எனவும் அறிவிக்க வேண்டும் மேலும் உடனடியாக அடைக்கப்பட்டுள்ள மடையை உடனடியாக பாசனத்திற்கு திறந்து விட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ரோப் கார் திட்டம் அறிவிக்கப்பட்டு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, பாதாள சாக்கடை திட்டமும் பலமுறை கோரிக்கை வைத்து ஒருவேளை கூட நடைபெறவில்லை. குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, மின் வசதி போன்ற பிரச்சனைகளை முறைப்படுத்துவதில் இந்த அரசு தவறிவிட்டது.
நிறைவேறாத திட்டங்களை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என முதல்வர் கூறினார் ஆனால் நாங்கள் கூறும் திட்டங்கள் அனைத்தையும் மாற்றுவதற்கு தான் முயற்சிக்கிறார்கள். ரோப் கார் திட்டம் மட்டும் தான் கோவில் நிதியிலிருந்து செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். அதை முறையாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சமீபத்தில் ஒரு கோவிலில் ரோப் கார் அமைக்கப்பட்டு முதல் நாளே அது நின்று விட்டதை போல் ஆகி விடக்கூடாது.
எடப்பாடி வேலை இல்லாமல் வெட்டியாய் இருப்பதால் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று சேகர்பாபு கூறியது குறித்த கேள்விக்கு:
எடப்பாடியார் தேர்தலின் போது திமுக ஏழு சதவீத வாக்கு இழந்துள்ளது என்றும் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரத்துடன் கூறியதற்கு முதல்வர் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் கோபத்துடன் பேசினார். அதனால் கனவு காண்கிறாரா என்று முதல்வர் கேட்கிறார், உதயநிதி அரசியலில் முயற்சி அடையவில்லை என்று எடப்பாடியார் கேட்டது உண்மைதான், அதற்கு அவர் இருக்கிறாரா என்று உதயநிதி கோபத்துடன் கேட்கிறார். இப்போதுதான் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கோபம் வந்துள்ளது. அமைச்சர்களுக்கு கோபம் வந்தால் அவர்கள் பலவீனம் ஆகிவிட்டார்கள் என்று அர்த்தம், திமுக என்கிற கூட்டணி கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது. அவர்களுக்கு இது வீழ்ச்சி காலம்.
திமுகவுக்கு விவாதம் இருக்கலாம் ஆனால் விரிசல் இல்லை என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:
ஆறு மாதத்திற்கு முன்பாக இந்த விவாதம் எங்கே இருந்தது. மக்கள் மாறிவிட்டால் கூட்டணி கட்சிகள் நிற்காது. திமுக சார்பாக ஜல்லிக்கட்டு அரங்கமும், கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இரண்டும் பயனற்றுள்ளது. அதைவிட அவர்கள் செய்த சாதனை அமைச்சர் மூர்த்தியை வளர்த்துவிட்டுள்ளார்கள் அமைச்சர் மூர்த்திக்கு கீர்த்தி கிடைத்துள்ளது. மற்றொரு அமைச்சர் அடிக்கடி அமெரிக்கா செல்லும் நிறைவுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதான் திமுகவின் சாதனை.
2026 இல் ஆட்சி அமைப்பதற்கு ஓபிஎஸ், சசிகலாவை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை குறித்த கேள்விக்கு:
அந்த கணக்கு தவறு அவர்கள் சேர்ந்தால் தான் இந்த இயக்கம் வளரும் என்பதற்கு வாய்ப்பில்லை. இரட்டை இலையை மீட்பதற்கு தான் அம்மாவும், ஜானகி அம்மாவும் இணைந்தார்கள். இப்போது நாங்கள் இணைவதற்கு அங்கு யாரும் இல்லை. தென் மாவட்டத்தில் இருந்தார்கள் என்பதால் அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை உள்ளதே தவிர அவர்கள் இணைந்தால் மீண்டும் குழப்பம் தான் வரும். ஒற்றை தலைமை குறித்து நான் தான் பேசினேன். இரட்டை தலைமை குறித்து பேசினால் குழப்பம் தான் வரும். அவர்கள் சேர்ந்தால் தான் இந்த இயக்கம் வளரும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. எடப்பாடியாருக்கு இது தெரியாமல் இல்லை, இதைவிட அதிகம் குழப்பம் வந்து விடக்கூடாது. கட்சி தற்போது சரியாக நிற்கிறது இரட்டை இலைக்காகவோ, அலுவலகத்திற்காகவோ, பொதுச்செயலாளர் பதவிக்காகவோ நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களது ஒரே குறிக்கோள் திமுக சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதுதான்.
வைத்த லிங்கம் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு:
ஆதார அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம். சில சமயங்களில் அரசியல் நோக்கத்திலும் நடைபெறலாம். எனவே அது குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டிய அவசியம் அண்ணன் வைத்தியலிங்கத்திற்கு உண்டு.
மதுரை செல்லூர் பகுதிகளில் மழை நீர் பாதிப்பு குறித்த கேள்விக்கு:
மதுரை செல்லூரில் உள்ள பந்தல்குடி கால்வாய் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள அரசு எந்தவித திட்டத்தையும் அங்கு செயல்படுத்தவில்லை அதனால் தான் தற்போது இந்த மழை நீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
திருமால் நதி தூர்வாரப்படாததால் சிந்தாமணி சாமநத்தம் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது குறித்த கேள்விக்கு:
ஏற்கனவே தூர்வாரப்பட்ட கால்வாய்கள் மக்கள் குப்பையை வீசுவதால் மீண்டும் மழை நீர் நிற்கிறது. தற்போதுள்ள மாநகராட்சி உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.
பட்டா விவகாரத்தில் அமைச்சர் மூர்த்திக்கும், எம்பி. சு.வெங்கடேசனுக்குமான சர்ச்சை குறித்த கேள்விக்கு:
இருவரும் செய்வது தப்புதான். இருவருக்கும் முரண்பாடு இருப்பது தெரிகிறது ஆனால் எம்பி ஆக இருந்தாலும், நாங்களாக இருந்தாலும் விலையில்லா பட்டதாக்கள் விலை கொடுத்து வாங்கப்படக்கூடாது. துணை முதலமைச்சர் வருவதற்காக அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி இல்லாத இடத்திற்கு பட்டா கொடுப்பதும், தூரத்தில் பட்டா கொடுக்கும் நடைமுறையை மிக விரைவாக செய்கிறார்கள். சமீபத்தில் உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்தாயிரம் பேருக்கு மேல் பட்டா வழங்கினார்கள். பட்டா உள்ளவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்கப்பட்டதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது எனவே பட்டாக்களை முறையாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:
டாஸ்மாக் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கேட்டால் இந்த அரசால் கொடுக்க முடியாது. மதுக்கடைகளை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகளை தான் செய்கிறார்கள்.
தவெக மாநாட்டுக்கு எடப்பாடி வாழ்த்து கூறியது கூட்டணிக்கான தொடக்கமா என்ற கேள்விக்கு:
நல்ல எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது. அதிக ரசிகர்களைக் கொண்ட முதல் தல நடிகர், புதிய கட்சி, முதல் மாநாடு என்பதால் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் அதிமுக கூட்டணியில் சேருவாரா, சீமான் கூட்டணியில் சேருவாரா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திமுக எந்த காலகட்டத்திலும் ஐந்தாண்டுக்கு மேல் ஆட்சியில் இருந்ததில்லை. கொள்கை முரண்பாடு இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணியில் சேரலாம். எடப்பாடியாருடன் சில நாட்களில் நிறைய பேர் கூட்டணி சேருவார்கள்.
2026-ல் மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடுவீர்களா என்று கேள்விக்கு:
அது தலைமை கழகத்தின் முடிவு. அவர்கள் எங்கு போட்டியிட சொன்னாலும் போட்டிடுவேன். நான் மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை நான் எங்கு சென்றாலும் ஏற்றும் கொள்வார்கள். நான் மேயராக இருந்த போது ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே அம்மா ராஜினாமா செய்ய சொல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட சொன்னார்கள். அதைப்போல அங்கு இருந்த கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டுதான் இந்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கு போட்டியிட வந்தேன் என கூறினார்