பாஜக பிரமுகர் கட்டிய வீடு சப் கலெக்டர் தலைமையில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு
புதுச்சேரியில் சேதராப்பட்டு, கரசூர் கிராமப் பகுதியில் இருந்து 749 ஏக்கர் இடம் சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்க கடந்த 2007 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
ஒரு சிலர் இடங்களை தர மறுத்த நிலையில் அவர்களிடம் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை அரசு கையகப்படுத்தினர்.
இதில் கரசூரை சேர்ந்த பாஜகவில் கேந்திர பொறுப்பாளராக இருக்கும் செல்வராசு அரசு கையகப்படுத்திய தனது நிலத்தை வழங்க மறுத்துவிட்டார்.
மேலும் வீடு கட்டி குடியேற வேறு இடமில்லாததால் கடந்தாண்டு செல்வராசு 50 லட்ச ரூபாய் செலவில் வீட்டை கட்டினார்.
அப்போது வில்லியனூர் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு கட்ட கூடாது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதையும் மீறி செல்வராசு வீடு கட்டினார்.
அந்த வீட்டை வருவாய் துறை அதிகாரிகள் இடிக்க வரும் பொழுது செல்வரசு மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரச்சனையில் ஈடுபட்டதால் அப்போது அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
மேலும் செல்வராசு தனது வீட்டை இடிக்க கூடாது என்று முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் வில்லியனூர் சப்-கலெக்டர் சோம சேகர அப்பாராவ் கொட்டாரு, தலைமையில் தாசில்தார் சேகர், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் கார்த்திகேயன், பிப்டிக் மேலாளர் ராகிணி, போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், நில அளவை துறை ஊழியர்கள் போலீசார் என 85 பேர் நான்கு ஜேசிபி இயந்திரத்துடன் செல்வராசு வீட்டிக்கு வந்து வீட்டின் உள்ளே உள்ள பொருட்களை வெளியே எடுக்குமாறு கூறினர்.
அதற்கு செல்வராசு அவரது மனைவி சுதா மற்றும் அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
செல்வராசு குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 10 பேரை குண்டு கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் ஜேசிபி இயந்திர மூலம் வீட்டின் முன்பக்கத்திலிருந்து இடித்தனர். இந்த சம்பவத்தால் கரசூர் பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டது.
வருவாய்த் துறையினரின் செயலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வீடு முற்றிலும் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.