வெடிகுண்டு சோதனை ஒத்திகையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிபொருளுடன் கூடிய மர்ம சூட்கேஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை ஒத்திகையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிபொருளுடன் கூடிய மர்ம சூட்கேஸை போலீசார் மீட்டனர், இதனால் வெடிகுண்டு சோதனை நடைபெற்ற வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மற்றும் பிரெஞ்சு தூதரகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த எஸ்.பி-க்கள் லட்சுமி சௌஜன்யா, மற்றும் ரகுநாயகம், தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்பநாய் மற்றும் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை,சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக தனியார் வணிக வளாகத்தில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை உடனடியாக வெளியேற்றிவிட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் வணிக வளாகத்தில் உள்ள ஐந்து திரையரங்கம் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஷோரூம்களிலும் ஸ்கேனர் மற்றும் வேப்பர் டிடெக்டர் மூலம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது முதல் தளத்தில் உள்ள ஒரு ஒரு ஷோரூமில் மர்ம சூட்கேஸ் இருப்பதும் அதில் அதிக சேதத்தை விளைவிக்கக் கூடிய வெடிபொருள் இருப்பதும் மோப்பநாய் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு கவசத்துடன் சென்று மர்ம சூட் கேஸை பத்திரமாக மீட்டு பாம் பேஸ்கெட்டில் வைத்து பத்திரமாக தனி இடத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் தனியார் வணிக வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்ற சம்பவத்தால் கடலூர் சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.