வாரிசுகள் வெளியூர் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில் மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் காவல்துறை, மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் புதுமையான நடவடிக்கை பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது
நவீன காலத்தில் வீட்டிற்கு ஓரிரு பிள்ளைகள் மட்டுமே உள்ள நிலையில் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் வெளியூர் வெளிநாடு சென்று விட்டால் புதிய தம்பதியினர் வீடுகளில் தனித்து விடப்படுகின்றனர். தனிமை ஒருபுறம் இருந்தாலும் பாதுகாப்பற்ற ஒரு அச்ச உணர்வில் இவர்கள் வாழ நேரிடுகிறது. வீடு புகுந்து திருடும் கொள்ளையர்களின் முக்கிய இலக்காக வயதான தம்பதியினரின் வீடுகள் உள்ளன. இவற்றைத் தவிர்க்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா மயிலாடுதுறை நகரில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
அதன்படி மயிலாடுதுறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தனிமையில் வாழும் மூத்த குடிமக்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு காவல்துறை சார்பில் தனியாக ரிஜிஸ்டர் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. வாரம் இரு முறை அந்த வீடுகளுக்கு செல்லும் காவல்துறையினர் வீட்டில் உள்ள முதியவர்களை சந்தித்து காவல்துறையால் வழங்கப்பட்ட நோட்டில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். வீடுகளில் தனியாக இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டால் கதவை திறக்க வேண்டாம் என்றும் காவல்துறை அளித்துள்ள புத்தகத்தில் இடம் பெற்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனாவின் உத்தரவைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சுப்ரியா மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று பழங்கள் வழங்கி நலம் விசாரித்ததுடன், காவல்துறையின் புதிய திட்டம் குறித்து எடுத்துரைத்தார். இந்த புதுமையான திட்டம் மயிலாடுதுறையில் வரவேற்பை பெற்றுள்ளது.