திருவாரூர் அருகே அரசவனங்காட்டில் தனியார் பஸ் மோதி ஒருவர் பலி. சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அரசவனங்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பாலசுப்ரமணியன்(38). திருமணமான இவர் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று அரசவனங்காட்டிலுள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு தனது மோட்டார் பைக்கில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது திருவாரூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் பாலசுப்பிரமணியன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.