தமிழக-கேரளா எல்லையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை திடீர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையம் அருகே கிருஷ்ணன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று அதிகாலையில் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக அந்த தோட்டத்திலே நின்று கொண்டிருந்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் பயப்படாத அந்த காட்டு யானை நின்ற இடத்திலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, யானைக்கு ஏதோ உடல் ரீதியான பிரச்சினை இருப்பதை உணர்ந்து கொண்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுக்களை வரவழைத்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சைஅளித்தனர்.
தொடர்ந்து, நின்று கொண்டிருந்த யானை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில், நீண்ட நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அதனை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், எந்தவிதமான சிகிச்சையும் பலன் அளிக்காமல் அந்த காட்டு யானையானது தற்போது உயிரிழந்துள்ளது.
மேலும், யானை உயிரிழப்பு காரணம் என்ன? வேறு ஏதேனும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதா? என்பது குறித்து உடற் கூராய்வு பரிசோதனைக்கு பின்பு தான் தெரிய வரும் எனவும், உடற்கூறாய்வு பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.