ரப்பர் பந்து போல் உடலை வளைத்து கடினமான யோகாசனம் செய்த மாணவி
ரப்பர் பந்து போல் உடலை வளைத்து கடினமான யோகாசனம் செய்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி சான்றிதழையும் பதக்கத்தையும் வழங்கினார், பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று பேச்சு.
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது பயிற்சியினை தருமபுரம் ஆதீன 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது பள்ளிகளில் உடற்பயிற்சிக்கான நேரம் சரிவர ஒதுக்கப்படுவதில்லை. மாணவர் பருவத்தில் உடற்பயிற்சிக்கான போதிய நேரம் ஒதுக்கினால் உடல் வளத்துடன் இருக்கலாம். யோக பயிற்சி நமது உடலையும் மனதையும் காப்பாற்றவல்லது என்று பேசினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேஜாஸ்ரீ என்ற நான்கு வயது மாணவி அனுமன் ஆசனம் விருச்சிக ஆசனம் திரவிக்கிரமாசனம், நடராசனம் மயூராசனம் வஜ்ராசனம் உள்ளிட்ட கடினமான ஆசனங்களை பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் ரப்பர் பந்து போல் உடலை வளைத்து செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து மாணவிக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் பதக்கத்தையும் சான்றிதழையும் ஆதீனம் சார்பில் வழங்கினார்.