ராஜபாளையத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள 18வது வார்டு வடக்கு மலையடிப்பட்டி, குலாலர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காமராஜபுரம், எம்ஜிஆர் நகர் 1. எம்ஜிஆர் நகர் .2 உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சஞ்சீவி மலையின் வடக்கு பகுதியின் உச்சியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பகுதியில் பற்றிய நெருப்பு காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவியதால் மலையின் பல்வேறு பகுதிகள் தீக்கிரையாகின.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகத்தில் நெருப்பு கொளுந்து விட்டு எரிவதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் அடிவாரத்தில் உள்ள வீடுகளுக்கு நெருப்பு பரவாமல் தீ அணைப்பு துறையினர் தடுத்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நகர் மக்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.