திருச்சி அருகே வாலிபருக்கு சரமாரி வெட்டு ; பழிக்குப்பழியாக நடந்த கொலையால் பரபரப்பு
திருச்சி அருகே பழிக்குப் பழியாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த கணபதி மகன் மதிர்விஷ்ணு (18). இவர், இதே பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் கோகுல் கொலை வழக்கில் (ஏ3) குற்றவாளியாக இருந்தார்
கோயிலில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கோகுல் கொலைச் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக தேசிங்கு ராஜா, கமல்ராஜ், மதிர்விஷ்ணு, மகேஷ் வர்மா, முத்து, நித்யானந்தம், ரஞ்சித் உட்பட, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் பிணையில் வெளியே வந்த மதிர் விஷ்ணு, இன்று காலை கொடியாலத்தில் இருந்து, திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.
திண்டுக்கரை பேருந்து நிறுத்தம் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பேருந்தில் இருந்த மதிர்விஷ்ணுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடிய அவரை விடாமல் துரத்தி, துரத்தி வெட்டிவிட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மதிர்விஷ்ணுவை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்