அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்த புதுமண தம்பதிகளுக்கு திருஷ்டி சுற்றி பணம் கேட்டு திருநங்கைகள் தகராறு செய்து காவல்துறையினரையும் பணி செய்யவிடாமல் தடுத்த திருநங்கைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்…
வழக்கு பதிவு செய்த நகர போலீசார் மூன்று திருநங்கைகளை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்…
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மணமக்களை திருநங்கைகள் ஒன்றுகூடி தகாத வார்த்தைகளால் பேசியும் அடித்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் பௌர்ணமி தினங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
அண்ணாமலையாரை தரிசிக்க வருகை தரும் பக்தர்களிடம் அவ்வப்போது திருநங்கைகள் வழிமடக்கி பிச்சை எடுப்பதும், அவர்கள் தலையில் கையை வைத்து ஆசி வழங்குவதாக ஆபாசமாக பேசியும், பாக்கெட்டில் கையை விட்டு பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
அப்படி சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்கள் இன்று அண்ணாமலையார்திருக்கோவிலில் சாமி தரிசனம் முடித்து அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தங்களது காரை எடுப்பதற்காக வந்து கொண்டிருந்த பொழுது வழிமறித்த திருநங்கைகள் புதுமணத் தம்பதிகளுக்கு திருஷ்டி கழிப்பதாக கூறி திருஷ்டி கழித்துள்ளனர்.
இதையடுத்து திருஷ்டி கழித்ததற்காக புதுமணத் தம்பதியினர் ரூபாய் 200 வழங்கினர். ஆனால் ரூபாய் 500 வழங்க வேண்டும் என அடாவடியாக திருநங்கைகள் கூறியதால் முடியாது எனக்கூறி காரில் ஏற முயற்சித்தவர்களை திருநங்கைகள் சாபம் விட்டதாக கூறப்படுகிறது.
திருமண தினத்தன்று திருநங்கைகளிடம் சாபம் பெற்று விட்டோம் என்று அதிர்ச்சி அடைந்த புதுமணத் தம்பதி குடும்பத்தினர் திருநங்கை ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடிகாரில் இருந்த தம்பதியினரை காரில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயற்சித்து அந்த வழியாகச் சென்ற பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் திருநங்கைகள் சரமாரியாக சாபம் விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது திருநங்கைகள் போக்குவரத்து காவல்துறையினரை பணி செய்ய விடாமல் அவர்களையும் ஒருமையில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து புதுமண தம்பதியினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
புதுமணத் தம்பதியினரை 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடி தாக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் இது தொடர்பாக ஊத்தங்கரையைச் சேர்ந்த ரீனா, செங்கம் பகுதியைச் சேர்ந்த மாயா, தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த தனுஷ்கா ஆகிய 3 திருநங்கைகள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுவெளியில் பொதுமக்களை அச்சுறுத்த வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர போலீசார் 3 திருநங்கைகளையும் கைது செய்து திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.