நத்தம் அருகே சிட்டிசன் படத்தில் வருவது போன்று அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம். அடிப்படை வசதிகள் செய்து தராத பட்சத்தில் அரசு வழங்கிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என பொதுமக்கள் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொடுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்வதற்கு நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டிய அவலம் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காகவும், வேலைக்கு செல்வதற்கும், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும், அவசர காலங்களில் மருத்துவமனை செல்வதற்கும் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் நீண்ட தூரம் நடந்தே சென்று பின்னர் பேருந்து மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இங்குள்ள சாலைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. அச்சாலை தற்போது நடந்து செல்லவும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் முடியாத அளவில் குண்டும் குழியுமாக உள்ளது மட்டுமல்லாது மிகவும் பழுதடைந்து பயணிக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் கடந்த 1988 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
அது முற்றிலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து பாழடைந்த பங்களா போல் உள்ளது. மேலும் இங்குள்ள சுடுகாட்டில் (மயானம்) மின்வசதி மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவுமின்றி புதர்கள் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குறைந்த கொள்ளளவை கொண்டுள்ளதால் குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் என்பதாலும் மலைகளுக்கு நடுவே உள்ள கிராமம் என்பதாலும் இவ்வூரைத் தாண்டி வேறு ஊருக்கு செல்வதற்காக முறையான சாலை இல்லை. இங்கு வசிக்கும் மக்களை அரசே புறம் தள்ளுகிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் தங்களது கிராமத்தை சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் அரசாங்கம் நினைப்பதாகவும், கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றினால் கூட அவை நிறைவேற்றுவதில்லை என்றும், அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் உதவி கூட கிடைப்பதில்லை என்றும் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக செயல்பட்டு செய்து தராத நிலை நீடித்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட அரசு ஆவனங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என கூறினார்கள்.