பத்திரப்பதிவு முறைகேடு கண்டித்து, மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகம் உள்புறத்தில் பெண்மணி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது தாயார் மூலம் கிடைத்த மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது இரண்டு மகன்கள் ஆன ஜெயபிரகாஷ் மற்றும் நடராஜன் ஆகியோருக்கு சரிசமமாக பிரித்துக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சொத்துக்கள் முழுவதையும் மூத்த சகோதரர் நடராஜனுக்கு, முத்துகிருஷ்ணன் எழுதி வைத்த நிலையில் இளைய மகனுக்கு, அதற்கு ஈடான பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து இருந்தார்.
இதற்காக நடராஜன் தனது சகோதரர் ஜெயபிரகாஷுக்கு 80 லட்சம் ரூபாய்க்கான, பணம் கொடுப்பதாக பத்திரத்தில் எழுதிக் கொடுத்த நிலையில் பணம் தரவில்லை இதனை எதிர்த்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஜெயப்பிரகாஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது குடும்ப சொத்தை மூன்றாவது நபருக்கு விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது என மயிலாடுதுறை மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்திருந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பாகப்பிரிவினை சொத்தை மூன்றாவது நபருக்கு சார்பதிவாளர்கள் உதவியுடன் நடராஜன் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை கண்டித்து, ஜெயபிரகாஷ் மனைவி சுலோச்சனா என்பவர் இன்று மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்த ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.