சிதம்பரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு.முட்லூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம். திமுக ஆட்சிக்கு வந்த பின் மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து சிதம்பரம் அருகே உள்ள பு. முட்லூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளரும், தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியா பங்கேற்று வேனில் இருந்தபடியே வேட்பாளர் சந்திரகாசனுக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
சிதம்பரம் நகரில் பேசுவதில் பெருமைப்படுகிறேன். ஒருமுறை சிதம்பரம் மக்களை ஏமாற்றி எம்பியான திருமாவளவன் . மறுபடியும் மக்களை ஏமாற்றி எம்பியாக ஆசைப்படுகிறார். கடவுள்களை ஆபாசமாக பேசுபவர் சிதம்பரத்தில் ஜெயிக்கலாமா. தர்மம், நியாயம், மக்கள் ஜெயிக்க வேண்டும். 2 சீட்டுக்காக தன்னை நம்பி இருக்கிற இன மக்களை ஏமாற்றி சுயநலத்திற்காக அடகு வைத்து கட்சி நடத்தும் சுயநல அரசியல்வாதி திருமாவளவன். அவர் அரசியல்வாதி இல்லை. தன் இன மக்களை உசுப்பேத்தி ஏமாற்றுகிற அரசியல் வியாதி.
புத்தர், அம்பேத்கர் என்று பேசுவார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவேன் என வெற்றி பெற்றார். ஆனால் தடுப்பணை கட்டவில்லை. அதிமுக ஆட்சியில் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் திமுக தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறுத்தி விட்டது. திருமாவளவன் அமைதியாக ஸ்டாலினுக்கு கொத்தடிமையாக இருந்தார். ஒரு பொதுத் தொகுதியை வாங்குவதற்கு துப்பில்லை. திருமாவளவன் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. ஆபாசமாக படங்கள், சிலைகள் இருந்தால் அது கோயில் என்று கேலி செய்வார். ஆனால் தேர்தல் வந்தால் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார். அவர் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று.
காங்கிரஸ் தலைவர் பதவியை கொள்கைக்காக தூக்கி எறிந்த அம்பேத்கர் எங்கே. வெறும் 2 சீட்டுக்காக தன்மானத்தை இழந்து இனமானத்தை அடகு வைத்த திருமாவளவன் எங்கே? நிற்பதற்கு ஒரு சீட்டு, விக்கிறதுக்கு ஒரு சீட்டு என நினைக்கும் திருமாவளவனால் இந்த தொகுதிக்கு எதுவும் நடைபெறாது. இந்தப் பகுதியில் சாலைகள் எல்லாம் திருமாவளவனின் பானை சின்னம் மாதிரியே குண்டும், குழியுமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் எப்படி தாமரை மலரக் கூடாதோ அது போல் திமுக கூட்டணியும் வெற்றி பெறக் கூடாது. இந்த இரண்டு கட்சிகளும் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரு கட்சிகளுமே நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அரசியலில் இல்லை. சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் அரசியலில் இருக்கிறார்கள். அவர்கள் வைத்துள்ள கூட்டணி கொள்கைக்காக அல்ல. கொள்ளை அடிப்பதற்காக.
திமுக கொள்கை வேறு, திருமாவளவன் கொள்கை வேறு. காங்கிரஸ் கொள்கை வேறு. மதிமுகவுக்கு என்ன கொள்கை என்று தெரியாது. கட்சியே இல்லாதவர் கமலஹாசன். பாஜக கூட்டணியில் அத்தனை ஜாதி கட்சிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு ஜாதி ஒழிப்போம் என்று சொல்கிறார்கள். மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். கரகாட்டக்காரன் படத்தில் ஓட்டை வண்டியை ஒரு கும்பல் தள்ளி கொண்டு வரும். அந்த ஓட்ட வண்டியை பார்த்த உடனே ஒருத்தர் ஓடி வந்து பழைய பேரீச்சம்பழம் என்று கூறுவார். அதுபோல்தான் திமுக கூட்டணி இருக்கிறது.
அந்த கூட்டணியில் மானஸ்தன் கமலஹாசன். அவர் அரசியலுக்கு வந்து யாருக்கு என்ன லாபம் இருக்கிறது. தண்ணியில் போட்டால்தான் துணி சாயம் போகும். ஆனால் கமலஹாசன் சாயம் போனவர். கருணாநிதி மகன் ஸ்டாலின் என பேசியது கெட்ட வார்த்தை எனக் கூறியவர். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் மகன் உதயநிதியுடன் கைகட்டி நிற்கிறார். திமுகவை எதிர்த்து டிவியை எல்லாம் உடைத்து கட்சி ஆரம்பித்தார். இதுபற்றி கேட்டால் டிவி உடைந்தால் என்ன. ரிமோட் கண்ட்ரோல் என்கிட்ட இருக்கிறது என்கிறார். பொண்டாட்டி ஓடிப் போனால் என்ன. அவள் புடவை இன்னும் பத்திரமாக வீட்டில் இருக்கிறது என்று கூறுகிறார்.
அந்தக் கட்சியில் இன்னொரு மானஸ்தன் வைகோ. தமிழ்நாட்டில் சிறந்த சைக்கோ அண்ணன் வைகோ. தான் எந்த வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவை கட்சி உடைத்துக்கொண்டு வெளியில் வந்து கட்சி ஆரம்பித்தாரோ, அதே வாரிசிடம் ஒத்த சீட்டுக்காக கைகட்டி இருக்கிறார். இவர்களுக்கெல்லாம் வெக்கம் மானம் சூடு சொரணை இல்லை. ஷேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்த மேதாவி. ஆனால் கைகட்டி நிற்பது உதயநிதி ஸ்டாலினிடம். இலக்கியம் தெரியாது வரலாறு தெரியாது கணக்கு தெரியாது. இந்திய கொடிக்கும் சீனக்கொடிக்கும் ஸ்டாலினுக்கு வித்தியாசம் தெரியாது.
அண்ணனுக்கு ஒரு தோசை என வடிவேலு பேசுவதுபோல் திருமாவளவன் கூட்டணி பேச்சு இருந்தது. கடைசியில் அண்ணனுக்கு ஒரு தோசை என்று வந்து விட்டது. பெரம்பலூர் பொதுத் தொகுதியாக ஆன உடனே ஆ.ராசாவை நீலகிரிக்கு அனுப்பி வைத்தவர் ஸ்டாலின். இவர் ஜாதி அரசியல் இப்படித்தான் இருக்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சி காணாமல் போய் விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக உள்ளது. தலைமையும் இல்லை. தலைவர்களும் இல்லை. காங்கிரஸ் கட்சி 6 சீட்டு கேட்டார்கள். அதை தலைகீழாக படித்த ஸ்டாலின் 9 சீட்டு கொடுத்து விட்டார். ஸ்டாலினின் அதிபுத்திசாலித்தனத்தை செல்வப்பெருந்தகை விரைவில் தெரிந்து கொள்வார்.
அதிமுக ஆட்சியில் அனைவரும் நிம்மதியாக இருந்தனர். கந்து வட்டி இல்லை. கொலை சம்பவம் நடக்கவில்லை. ரவுடியிசம் இல்லை. சாதி மத சண்டை இல்லை. தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், மலிவு விலையில் அம்மா உணவகம், மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச சைக்கிள் போன்ற நல்ல திட்டங்கள் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை. 6 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். வரியை ஏற்று மக்கள் தலையில் சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக கடன் வாங்கும். ஆனால் திமுக வரியையும் ஏற்றி கடனையும் வாங்கி விட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் இருந்த நல்ல திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். 10 வருட அதிமுக ஆட்சியில் தானே புயல், ஒக்கி புயல், கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள் வந்தது. ஆனாலும் மக்கள் திட்டங்கள் எதையும் அதிமுக நிறுத்தவில்லை. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. அதனால் உங்களுக்கு நல்லது செய்ய முடியாது என அதிமுக சொன்னதா? இந்த முறை திமுக ஜெயித்தால் சிலிண்டர், பெட்ரோல், டீசல், குறைத்து தருவோம் என்று கூறுகிறார்கள். வெற்றி பெற்றதும் திமுக தருவார்களா. அப்படி கொடுத்தால் சிலிண்டர் தருவார்கள். அதன் உள்ளே கேஸ் இருக்காது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக என்ன வேண்டுமானாலும் பேசும். தேர்தலுக்குப் பிறகு வேறு மாதிரி பேசுவார்கள். வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம். ஆனால் திமுககாரனை நம்பக்கூடாது. இன்னொரு பக்கம் பாஜக டிராமா போடுது. இரண்டுமே தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை. திமுகவுக்கும், பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ரெண்டுமே ஒன்றுதான்.
திமுக பயங்கரமா பொய் சொல்லும். பாஜக சொல்கிற பொய்யை பயங்கரமா சொல்லும். திமுக திராவிட மாடல் என்று ஏமாற்றும். பாஜக இந்திய மாடல் என்று ஏமாற்றும். திமுக கடவுள திட்டிக்கொண்டே சாமி கும்பிடும். பாஜக கடவுளே திட்டுகிற அளவு சாமி கும்பிடும். ஸ்டாலின் மகனைப் பற்றி மட்டுமே யோசிப்பார். மோடி மரத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பார். ஸ்டாலின் டெய்லி விக்கு வைப்பாரு. மோடி ஒரு நாள் நாட்ட விப்பாரு. திமுக மக்கள்கிட்ட திருடுவாங்க. பாஜக மாநிலங்களில திருடுவாங்க. திமுக திருடுறதில்ல ஸ்பெஷலிஸ்ட். பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். இரண்டு பேருமே ஆபத்தானவர்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டால் அவர்கள் காங்கிரசுக்கு கூஜா தூக்குவார்கள். பாஜகவிற்கு ஓட்டு போட்டால் அவர்கள் அடுத்த கட்சியில் இருந்து ஆளை தூக்குவார்கள். திமுகவிற்கு பாடம் புகட்ட அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என பேசினார்.