நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை
நாகை இலங்கை இடையே மே 13 ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்.14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தார்.
“செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட அந்த கப்பலில் பயணக் கட்டணமாக ரூ. 6, 500 ,18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 7, 670 நிர்ணயம் செய்யப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கிய முதல்நாளில் எதிர்பார்த்த பயணிகள் வராததால் 75 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது. இதனால் ரூ. 2,375 கட்டணம், ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்தமாக ரூ. 2,803 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய முன்பதிவு செய்தனர். இதனால் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கப்பல் சேவை வாரத்துக்கு மூன்று நாள்கள் என மாற்றப்பட்டது. திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. எனினும் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் கப்பல் போக்குவரத்து அக். 20 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இயற்கை சீற்றம் குறைந்தவுடன் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஜனவரி மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, நாகப்பட்டினம் இலங்கை இடையே குறைந்த கட்டணத்துடன், கூடுதல் எடை அதாவது ஒரு நபர் 110 கிலோ கொண்ட பொருட்களை எடுத்து செல்லும் வசதி கொண்ட கப்பல் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. தற்போது மே 13 ஆம் தேதியிலிருந்து மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளது.
“சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படவுள்ளது.இந்த பிரம்மாண்ட கப்பல் கீழ்தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க நபர் ஒன்றுக்கு ஜிஎஸ்டியுடன் ரு. 5 ஆயிரமும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க நபர் ஒன்றுக்கு ஜிஎஸ்டியுன் ரூ. 7 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்தமானில் தயாராகியுள்ள “சிவகங்கை‘ கப்பல் வரும் 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகம் வரவுள்ளது. இதற்காக பயணிகள் காத்திருக்கும் அறை, பரிசோதனை அறை என அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.