திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் திமுகவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை. விபத்து ஏற்படும் முன் துரிதமாக செயல்பட நகராட்சிக்கு வேண்டுகோள்.
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பனகல் சாலையில் நகராட்சி சோமசுந்தரம் பூங்கா செயல்பட்டு வருகிறது. அண்மையில் 40 லட்சம் ரூபாய் செலவில் புனரமைகப்பட்ட இந்த பூங்காவில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை என ஒரு புறம் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பூங்காவிற்கு வரும் மக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா வளாகத்தில் உள்ளே கேண்டின் செயல்பட்டு வருகிறது. திமுகவினரால் டெண்டர் எடுத்து செயல்பட்டு வரும் இந்த கேண்டின் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவு இடம் ஆக்கிரமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பூங்காவிற்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கக்கூடிய பகுதியில் கேண்டீன் உரிமையாளர்கள் துரித உணவுகளை அதே இடத்தில் சமைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் தீ விபத்து ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. எனவே உடனடியாக இந்த ஆக்கிரமிப்பை அகற்றி குறிப்பிட்ட அளவிற்கு பாதுகாப்பான முறையில் அந்த கேண்டீன் செயல்பட வேண்டும் என திருவாரூர் அதிமுக நகர மன்ற உறுப்பினர் கலியபெருமாள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பூங்கா முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமலும், பாதுகாப்பற்ற முறையில் மின்சார ஒயர்களும் உள்ளன. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.