80 ஆண்டு கால கனவு நிறைவேறியது இப்போது தான் உண்மையான சுதந்திரம்
80 ஆண்டு கால கனவு நிறைவேறியது. இப்போது தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணர்கிறோம் கிராம மக்கள் நெகிழ்ச்சி பேட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குறிச்சி காலணி தளிக்கோட்டை காலனி கருவாக்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1942 ஆம் ஆண்டு இப்பகுதி நிலக் குடியேற்ற கூட்டுறவு சங்கம் வாயிலாக 229 குடும்பங்களுக்கு மூன்று ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலம் அப்போதைய ஆங்கிலேய அரசால் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த 1989 ல் 165 ஏக்கர் நிலங்களுக்கும் 114 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு மின் இணைப்பு அரசின் இலவச வீடு பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த 800 குடும்பத்தினர் பல்வேறு அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கஜா புயலின் போது ஏற்பட்ட இழப்பிற்கு கூட நிவாரணம் பெற முடியாத சூழலில் இப்பகுதி பொது மக்கள் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 51 நில சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே பட்டா வழங்கலாம் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டது அடிப்படையில் இங்கு உள்ள 580 குடும்பங்களுக்கு வரும் 8ம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் பட்டா வழங்கப்பட உள்ளது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த பல வருடங்களாக பட்டாவிற்காக தாங்கள் போராடி வந்ததாகவும் பட்டா இல்லாத காரணத்தினால் பல்வேறு அரசு சலுகைகளையும் பெற முடியாமல் தவித்து வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது பட்டா கிடைத்திருப்பதன் மூலம் உண்மையான சுதந்திரம் தற்போது தான் தங்களுக்கு கிடைத்திருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இதற்கு காரணமாக இருந்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.