திருப்பதி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்ட சாகச பயணம்
புராண காலத்தில் சாதுக்கள், முனிவர்கள் ஆகியோர் புனித நீராடி இளமையை திரும்பப்பெற்ற குமாரதாரா தீர்த்தத்தில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் புனித நீராடல்.
திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் மூன்று லட்சத்து 65 ஆயிரம் புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
வெங்கடாச்சல மகாத்மியம், கருட புராணம் ஆகியவை உள்ளிட்ட புராணங்கள் திருப்பதி மலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடுவதன் மூலம் பாவ விமோசனம் பெறலாம் என்று தெரிவிக்கின்றன.
திருப்பதி மலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் இதே போன்ற மகிமை மிக்க புண்ணிய தீர்த்தம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குமாரதாரா புண்ணிய தீர்த்தம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையானின் தெப்போற்சவம் முடிந்தபின் வரும் பௌர்ணமி நாளன்று பக்தர்கள் அங்கு சென்று புனித நீராடி வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று பக்தர்கள் அங்கு சென்று புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர்.
திருப்பதி மலையில் உள்ள பாப விநாசம் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் பிளவு பட்ட மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இருக்கும் குமாரதார தீர்த்தத்திற்கு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பிரயாசையுடன் சென்றனர்.
தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், பொறியியல் துறையினர் ஆகியோர் பக்தர்கள் பாதுகாப்பாக இறங்குவதற்காக கயிறுகளை இரண்டு புறமும் கட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டு பக்தர்கள் புனித தீர்த்தத்திற்கு இறங்கி செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
அதேபோல் போலீசாரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குமாரதாரா புண்ணிய தீர்த்தத்தில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர்.
புராண காலத்தில் திருப்பதி மலையில் உள்ள குமாரதாரா புண்ணிய தீர்த்தத்தில் புனித நீராடிய சாதுக்கள் தங்கள் இளமையை திரும்ப பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த புண்ணிய தீர்த்திற்கு குமாரதாரா என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
புனித நீராட சென்ற பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவை உள்ளிட்ட ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து இருந்தது.