ஆண்டாண்டு காலமாக தொடரும் பழமை வாய்ந்த ஐதீகம்
போளூர் அருகே நாள் முழுவதும் ஆடு,மாடு, கோழி, நாய்கள் உடன் வனத்தில் தங்கும் கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக தொடரும் பழமை வாய்ந்த ஐதீகம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த இந்திரவனம் கிராமத்தில் ஊர் செழிப்பாக இருக்க, கிராம மக்கள், மற்றும் ஆடு, மாடுகள் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் விவசாயம் செழிக்கவும் கிராம மக்கள் அனைவரும் இன்று அதிகாலை தங்களுடைய வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் பொங்கல் கூடை, பாய் தலையணை, முரம் துடைப்பம், சமையல் பாத்திரங்கள் சமையல் பொருட்கள் ஆடு மாடு என குடும்பத்துடன் குளக்கரையில் உள்ள ஓங்காளியம்மன் கோயிலுக்கு சென்றனர்.
பகல் முழுவதும் அங்கே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வருவது வழக்கம் இந்திரவனம் கிராமத்தில் உள்ள மக்கள் நூதன முறையில் ஆண்டு தோறும் நடைபெறும் வனபோஜன திருவிழாவை கொண்டாடினர்.
சிறுவர் முதல் முதியோர் வரை அங்கு ஆடல் பாடலுடன் குதூகலமாக இருந்தனர்.
மாலை மீண்டும் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பம்பை உடுக்கை உடன் அம்மனை வர்ணித்து பின்னர் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஓங்காளியம்மன் மேளதாளத்துடன் ஊர்வலமாக பொதுமக்கள் பொங்கல் கூடையுடன் இந்திரவனம் கிராமத்தில் உள்ள அவரவர் வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர் .
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.