லிவ் – இன் உறவை பதிவு செய்ய உத்தரவு
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தைத் தாக்கல் செய்தது. அப்போது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த மசோதா அவையில் விவாதிக்கப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் நுழையக் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வெளியான தகவலில், பொது சிவில் சட்டம் அமலானதும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள், அல்லது புதிதாக அத்தகைய உறவில் ஈடுபடவிருப்பவர்கள் கட்டாயம் அரசிடம் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
மேலும், இந்த உறவில் நுழைபவருக்கு நிச்சயம் 21 வயது கடந்திருக்க வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள், மாநிலத்திற்கு வெளியே லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஒழுக்கத்துக்கு எதிராகவோ, அல்லது இருவரில் ஒருவர் முறையாக அரசுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டாலோ, அல்லது மற்றொரு உறவிலிருந்தாலோ, அல்லது இருவரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்தாலோ அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பேசிய மூத்த அதிகாரி, ``லிவ்-இன் உறவின் விவரங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஓர் இணையதளம் தயாராகி வருகிறது. விவரங்கள் மாவட்டப் பதிவாளரால் சரிபார்க்கப்படும். அவர் விசாரணை நடத்துவார். அதற்காக, அவர் இருவரையோ அல்லது அவர்களின் பெற்றோர் உட்பட வேறு யாரையும் அழைக்கலாம். ஒரு வேளை அவர்களின் பதிவு நிராகரிக்கப்பட்டால், பதிவாளர் தனது காரணத்தை எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பிரகடனங்களை (Declaration) சமர்ப்பிக்கத் தவறினால், அல்லது தவறான தகவல்களை வழங்கினால், மூன்று மாதங்கள் சிறை, ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். லிவ்-இன் உறவு குறித்து பதிவுசெய்யத் தவறினால், அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.