மதுரை திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் அன்னாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஐப்பசி மாதத்தில் சிவன் கோவில்களில் நடத்தப்படும் மிக முக்கியமான உற்சவம் அன்னாபிஷேகம். இந்த நாளில் சிவனுக்கு படைக்கப்படும் ஒவ்வொரு ஒரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கத்திற்கு சமமாக கருதப்படும். அதனால் தான் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடான கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணிய பலன் கிடைக்கும் என்பார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை சார்ந்ததும், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் அமைந்துள்ளதுமான பால்சுனைகண்ட சிவபெருமான் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
முன்னதாக, பஞ்சலிங்கம் முன்பு புனித நீர் (கடம்) குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, லிங்கத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து பூஜையில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் குடங்கள் மங்கள வாத்தியங்களுடன் சங்கொலி முழங்கிட ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பஞ்சலிங்கதிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து., அன்னம் சாத்துபடி செய்து காய்கறிகள் பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அபிஷேகத்தில் இருந்து பெறப்பட்ட பிரசாதம் நாள்பட்ட உடல் நோய் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.