அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. தெய்வ திருமண விழாவில் கலந்துகொண்டு ஏராளமானோா் தாிசனம் செய்தனா்.
தென் மாவட்டங்களில் புராதனமான அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்மன் கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கு சுவாமி, அம்பாள் என தனித்தனி சன்னதிகள் உள்ளன.
திருக்கோயிலில் உள்பிராகாரத்தில் ஆறுமுக நயினார் சந்நிதி அமைந்துள்ளது. அங்கு மூலவா் ஆறுமுகநயினாா் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றாா். இந்த வருட கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி கந்த ஆறு நாட்கள் விழாக்கள் நடைபெற்று நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு சன்னதி முன் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சண்முகர் மற்றும் மூலவருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருக்கல்யாண நிகழ்வாக கும்பம் வைத்து ஹோமம் நடைபெற்றது. முதலில் மூலவா் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகநயினாருக்கு காப்பு கட்டி மாலைகள் மாற்றி திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது.
அதனை தொடா்ந்து உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது. பக்தா்களின் வெற்றிவேல் வேல் முருகா சரணகோஷங்களில் ஸ்ரீ சண்முகருக்கு தெய்வானை மற்றும் வள்ளியை தாரைவார்த்துக்கொடுக்கும் வைபவமும் அதனை அடுத்து பக்தா்களின் அரோகரா முருகா கோஷங்களுடன் திருமாங்கல்யதாரணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு பன்னீா் தெளித்தல், நலுங்கிடல் வைபவம், கண்ணாடி காண்பித்தல், பாலும் பழமும் கொடுத்தல் மற்றும் மாப்பிள்ளை பெண் பொாியிடுதல் நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக 6 முகங்களுக்கம் பஞ்ச தட்டு கற்பூரஆரத்தி காண்பிக்கப்பட்டது. தெய்வ திருமண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.