அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்பாள் திருக்கோவில் முன்பு 13வது ஆண்டு சக்தி தரிசனம். நெல்லை நகர் பகுதியில் உள்ள 36 திருக்கோவில்களில் உள்ள அம்மன் மின்னொளி அலங்காரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா. நேர்வரிசையில் நின்று பக்தர்களுக்கு காட்சி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாிசனம்.
மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா நெல்லை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். நெல்லை நகா் பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரங்களில் அம்பாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளும் 13வது ஆண்டு சக்தி தரிசனம் இரவு நடைபெற்றது.
அதன்படி நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன், வாகையடி அம்மன், உச்சினிமாகாளியம்மன், மாரியம்மன், அறம் வளர்த்த நாயகி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட 36 அம்மன் ஆலயங்களிலும் விஜயதசமி தினமாக இன்றைய தினம் தசரா திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு கோவிலிலும் உள்ள அம்பாளும் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி நெல்லையப்பா் ரதவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் முன்பு நடைபெற்ற சக்தி தரிசன நிகழ்ச்சியில் 36 திருக்கோவில்களை சேர்ந்த அம்பாள் சப்பரமும் ஒரு சேர வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாரதனையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
ஒவ்வொரு திருக்கோவிலிலும் ஏற்பாடு செய்யப்பட்ட சப்பரத்தின் முன்பு பெண்கள் கோலாட்டம் ஆடியும் தப்பாட்டம் நையாண்டி மேளம்,டோல் மேளம் உள்ளிட்டவைகள் அடித்து ஆட்டம் பாட்டம் என இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.நெல்லை நகர் பகுதியில் நடைபெற்ற சக்தி தரிசன நிகழ்ச்சியை ஒட்டி நெல்லை மாநகர ஆணையாளர் அறிவுறுத்தலின்படி நூற்றுகணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை நெல்லை கல்சுரல் அகடமி மற்றும் தென் மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கம் ஆகியோர் செய்திருந்தனர்,