மானூரில் அருள்மிகு தலைவாசல் கருப்பணசாமி கோயில் உற்சவ திருவிழா
பழனியை அடுத்த மானூரில் அருள்மிகு தலைவாசல் கருப்பணசாமி கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு பத்துநாட்கள் நடைபெற்ற திருவிழா மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பெற்றது.
பழனியை அடுத்த மானூரில் உள்ளது அருள்மிகு தலைவாசல் கருப்பணசாமி கோயில். இக்கோயிலில் வருடம் தோறும் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கருப்பணசாமி கோயில் திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி இரவு சாமிசாட்டுடன் துவங்கியது.
பத்துநாள் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அஷ்டபந்தன பூஜையும், வியாழக்கிழமை அனைத்து பொதுக்கோயில்களுக்கும் பூஜையும் நடத்தப்பட்டது. மூன்றாம் நாள் திருவிழாவாக பொங்கல் ஆராதனை, நான்காம் நாள் திருவிழாவாக உருமால்கட்டு சிறப்பு பூஜை, ஐந்தாம் நாள் திருவிழாவாக பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆறாம் நாள் திருவிழாவாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகநதி சென்று தீர்த்தம் எடுத்து வந்து பூஜைகள் நடத்தினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை உச்சிக்காலத்தின் போது தலைவாசல் கருப்பணசாமி உருவாரம் எடுத்துவரப்பட்டு புதன்கிழமை தீர்த்தம் செலுத்துதல், மாவிளக்கு எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இரவு ரதஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான நற்பணி மன்றங்கள் சார்பில் மின்விளக்கு அலங்காரத்தில் நடைபெற்ற ரதஊர்வலத்தில் பக்தர்களுக்கு சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு வானவேடிக்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை அன்னதானமும், சுவாமி சுற்றிவருதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இரவு சுவாமி உருவாரங்கள் ஆற்றில் விடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. வரும் செப்.26ம் தேதி இரவு இரவு கிடாவெட்டுதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தலைவர் சின்னமுருகன், துணைத் தலைவர் காட்டப்பன், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சேகர், கிருஷ்ணன், ராம்குமார், மானூர் மாரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.