சிதம்பரம் நடராஜர் கோயில் 5 புதிய தேர்களுக்கு புதிய வட கயிறுகள். தனியார் ஓட்டல் உரிமையாளர் சார்பில் ரூ 6 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட வட கயிறு கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைப்பு. வாத்திய கருவிகள் இசைக்க நான்கு வீதிகளிலும் வடகயிறு ஊர்வலமாக எடுத்துக் செல்லப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறும். அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட ஐந்து சுவாமிகள் தேர்களில் வலம் வரும். இந்நிலையில் கோயிலின் தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வடக்கயிறுகள் பழமையானதால் புதிதாக வடக்கயிற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த தனியார் ஓட்டல் உரிமையாளரான மோகன் என்பவர் சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில் இந்த புதிய தேர்வடக்கயிறை வழங்கினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்த தேர் வடகயிறு செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
லாரியில் கொண்டு வரப்பட்ட தேரோட்ட வட கயிறுகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தனித்தனியாக சுவாமி வீதியுலா வாகனத்தில் வைக்கப்பட்டு சிதம்பரம் நகரின் நான்கு மாட வீதிகளையும் வடகயிறு வலம் வந்தது. அப்போது பக்தர்கள் சிவ வாத்தியங்களை இசைத்தபடியே ஊர்வலத்தில் சென்றனர்.
பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைப்படி தீட்சிதர்களிடம் தேர் வடகயிறு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 5 வட கயிறுகளும் எடுத்துச் செல்லப்பட்டு கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
அடுத்த மாதம் 12ஆம் தேதி நடராஜர் கோயில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. அந்த தேரோட்டத்தில் புதிய தேர்வட கயிறுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய பக்தர் இளங்கோவன்,
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 6 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக 5 தேர்களுக்கும் வட கயிறுகள் செய்யப்பட்டது. ஓட்டல் உரிமையாளர் மோகனின் முயற்சியால் செய்து முடிக்கப்பட்ட இந்த வடகயிற்றை பருவத ராஜகுல டிரஸ்ட் நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று நடராஜர் கோயிலில் தீட்சிதர்களிடம் ஒப்படைத்தோம். சிங்கம்புணரி நகரில் கடந்த 6 மாத காலமாக இந்த வடகயிறு செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக 6 லட்சம் ரூபாய் செலவானது என தெரிவித்தார்.