திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மற்றும் கிரிவலம்…
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதால் பரபரப்பு…
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி நேற்று மாலை 06:05 மணிக்கு தொடங்கி இரண்டாவது நாளாக இன்று மாலை 04:48 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு உரய தொடங்கி சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவதுடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் நேற்று மாலை முதல் விடிய விடிய நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளான இன்றும் கிரிவலப் பாதை மற்றும் அண்ணாமலையார் திருக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் உள்ள அக்னிலிங்கம் எமலிங்கம் ஈசான்யலிங்கம் குபேர லிங்கம் நிருதிலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய 8 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் ஆன்மீக பக்தர்கள் தேரடி வீதியிலிருந்து மாடவீதி முழுக்க சுற்றி நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலும் இங்கு நிலவி வருகிறது.
இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் ஆங்காங்கே மாடவீதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டும் வருகின்றனர்.
அவ்வாறு பல மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள் காவல் துறையினரால் அனுப்பப்படும் பொழுது ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.