பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் செயல்படும் தனியார் தங்க நகை கடன் வங்கியில் வழக்கம் போல் இன்று ஊழியர்கள் வங்கி செயல்பாட்டிற்காக வந்துள்ளனர்.
ஊழியர்கள் அனைவரும் வந்து வங்கியை திறக்க முற்பட்டபோது திடீரென வங்கியின் மேல் மாடியில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவன் கையில் வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தில் வைத்து நான் சொல்வதைக் அனைவரும் கேட்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளான்.
இதனால் பயந்து போன ஊழியர்கள் அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கினர். ஒரு ஊழியரை கொண்டு மற்ற ஊழியர்களின் கைகளை தான் கொண்டு வந்திருந்த வயர் மூலம் கட்ட செய்துள்ளான் அந்தக் கொள்ளையன்.
பின்னர் அவர்களிடமிருந்து வங்கியின் சாவியை வாங்கி வங்கியின் கதவை திறக்க முற்பட்டு உள்ளான் அப்போது சாவியை மாற்றி போட்டதால் வங்கி அலாரம் அடிக்க தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன் அங்கிருந்தவர்களை விட்டுவிட்டு தப்பி ஓட தொடங்கினான் சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் கையில் கட்டுடன் அந்த இளைஞனை விரட்ட தொடங்கினர்.
கையில் கட்டுடன் ஊழியர்கள் ஒரு இளைஞனை விரட்டுவதை பார்த்த பொதுமக்கள் தப்பியோடிய அந்த இளைஞனை மடக்கி பிடித்தனர் அவன் கொண்டு வந்த பையை சோதனை இட்டபோது அதில் கொள்ளை அடிக்க தேவையான ஆயுதங்கள் அனைத்தும் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற அந்த இளைஞனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் இரவே கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததும் அந்த முயற்சி பயனளிக்காமல் ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. பெரும் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் வங்கியில் இருந்த சுமார் ரூபாய் 4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது இச்சம்பவத்தால் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.