in

திருச்சுழி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி


Watch – YouTube Click

திருச்சுழி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

 

திருச்சுழி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி; வங்கியின் லாக்கரை உடைக்க முடியவில்லை என்பதால் வங்கியில் இருந்த 67 சவரன் தங்க நகைகள் தப்பியது; சுவரில் துளையிட்டு அந்த துளையின் வழியாக கையை விட்டு வங்கியின் உள்ளே டார்ச் அடித்து பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புத்தனேந்தல் பகுதியில் பல ஆண்டுகளாக பட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் (SP. SPL.151) இயங்கி வருகிறது. இந்த‌ கட்டிடம் கடந்த 1977 ல் கட்டப்பட்டது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த பட்டமங்கலம் கூட்டுறவு வங்கியில் வீரசோழன் அருகேயுள்ள வத்தாப்பேட்டை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி(45) என்பவர் எழுத்தராகவும், கூடுதல் பொறுப்பு செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பாப்பாங்குளம் கூட்டுறவு செயலர் ஓய்வுபெற்ற நிலையில் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியரான முத்துப்பாண்டி வழக்கம் போல் நேற்று முன்தினம் (ஜூன்.19) காலை பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு பணிக்கு வந்த நிலையில் அன்று மாலை பணி முடிந்து கூட்டுறவு வங்கியை பூட்டிய நிலையில் வீடு திரும்பினார்.‌

இந்த நிலையில் மறுநாளான நேற்று (ஜூன்.20) காலை கூட்டுறவு வங்கி ஊழியர் முத்துப்பாண்டி பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு, மதிய வேளையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு வந்து, வங்கி கதவுகளை திறந்து பார்த்தபோது கூட்டுறவு வங்கியின் அலுவலக சுவர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு வங்கி ஊழியர் முத்துப்பாண்டி அதிர்ச்சியடைந்தார்.‌

இதனையடுத்து வங்கியை சுற்றி வந்து கட்டிடத்தை சரிபார்த்த போது கட்டிடத்தின் பின்பக்க சுவர் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் துளையிட்டிருந்ததை கண்டு முத்துப்பாண்டி மேலும் அதிர்ச்சியடைந்தார். மேலும் ஜன்னல் பகுதியும் உடைக்கப்பட்டிருந்தது. லாக்கர் இருந்த பகுதியின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து வங்கியினுள் சென்ற ஊழியர் முத்துப்பாண்டி லாக்கரை திறந்து பார்த்த போது லாக்கரில் இருந்த சுமார் ரூ 32 லட்சம் மதிப்புடைய 67 சவரன் தங்க நகைகள் அனைத்தும் சரியாக இருந்ததை கண்டு வங்கி ஊழியர் முத்துப்பாண்டி நிம்மதியடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி காவல் நிலைய போலீசார் கூட்டுறவு வங்கிக்குள் இயங்கி கொண்டிருக்கும் சிசிடிவி கேமேராக்களில் பதிவாகிய காட்சி‌ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் சில மர்ம நபர்கள் நள்ளிரவில் கூட்டுறவு வங்கியின் பின்பக்க சுவரையூம், ஜன்னல் பகுதியையும் கடப்பாரையால் இடித்து துளையிட்டு வங்கியினுள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது அந்த துளையின் வழியாக கையை விட்டு டார்ச் அடித்து பார்த்து போது வங்கி உள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்கிக் கொண்டிருந்ததை கண்டு அந்த வழியாக உள்ளே செல்லாமல், அங்கிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு சென்ற கொள்ளையர்கள் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையை பிரித்து சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடம் வழியாக லாக்கர் இருக்கும் பகுதிக்கு சென்று நகைகளை கொள்ளையடித்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் வங்கி லாக்கரை உடைக்க முடியவில்லை என்பதால்
கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் அந்த கொள்ளையர்கள் வங்கி சுவரில் துளையிட்டு அந்த துளை வழியாக கையை உள்ளே விட்டு எங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளது என டார்ச் அடித்து பார்க்கும் காட்சிகள் மட்டும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் பின்னால் இருந்த சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.

கூட்டுறவு வங்கியில் லாக்கர் வசதி இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நகைகள் தப்பியது.

இந்த கொள்ளை முயற்சி குறித்து பட்டமங்கலம் கூட்டுறவு வங்கி ஊழியர் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

செஞ்சி சாணக்கியா மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி

திருச்சியில் 250 லிட்டர் ஊறலை இரு சக்கர வாகனத்தில் சென்று அழித்த மாவட்ட ஆட்சியர், எஸ் பி