கொடைக்கானலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் பேசுகையில் நடுவே வந்த சவ ஊர்வலத்திற்கு மௌன அஞ்சலி செலுத்திய வேட்பாளர்…
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் திண்டுக்கல் தொகுதியில் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் பாமக போட்டியிட உள்ளது. தொடர்ந்து வேட்பாளர் திலகபாமா இன்று கொடைக்கானலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியில் பேசுகையில் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , ரோப் கார் திட்டம் செயல்படுத்துவதற்கு அரசின் கவனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குகளை சேகரித்தார்.
மேலும் அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் வாக்குகள் அவர்கள் சேகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து வேட்பாளர் திலகபாமா பேசிக்கொண்டிருந்த போது அப்பகுதியின் வழியே சவ ஊர்வலம் வந்தது. உடனே அமைதி காத்த வேட்பாளர் சவ ஊர்வலத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தி இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார் . இதனை தொடர்ந்து நாயுடுபுரம், கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .