குளித்தலையில் பழைய நாணயங்களில் ஒரு காயின் கொண்டு வந்தால் ஒரு சிக்கன் பிரியாணி, கடையில் திரண்ட பிரியாணி பிரியர்கள், போக்குவரத்து நெரிசலால் கடையை இழுத்து முடிய போலீசார்.
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் அருகே ஆர் – ரஹ்மான் திண்டுக்கல் பிரியாணி என்ற பெயரில் மூன்று நாட்கள் உணவு திருவிழா என்று வால்போஸ்டர்கள் குளித்தலை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. அதில் நான்காம் தேதியான இன்று ஒரு நாள் ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா ஏதேனும் ஒரு காயின் கொடுத்து ஒரு சிக்கன் பிரியாணி அள்ளுங்கள் என்ற வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து குளித்தலையிலிருந்து சுங்ககேட் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த கடையில் பழைய செல்லாத நாணயங்களை பலரும் கொண்டு வந்து கடை முன் திரண்டதால் கூட்ட நெரிசலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் கடை உரிமையாளரை வெளியே அழைத்து கடையின் சட்டரை இழுத்து மூடினார். பிறகு அங்கே கூடியிருந்த அனைவரையும் பிரியாணி இல்லை என கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
மேலும் பிரியாணி கிடைக்கும் என நம்பி பலரும் பழைய நாணயங்களை கொண்டு வந்து காத்திருந்தததாகவும் கடை விளம்பரம் செய்து முறையாக செயல்படுத்தாமல் கூட்டத்தை கூட்டிய கடை உரிமையாளர் மீது பிரியாணி பிரியர்கள் புகார் தெரிவித்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
பழைய காய்னுக்கு ஒரு சிக்கன் பிரியாணி விளம்பரத்தை தொடர்ந்து குளித்தலை முக்கிய சாலையில் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.