பிரிட்டனில் குடல் புற்றுநோய் தடுப்பூசிக்கான பரிசோதனை
இந்திய மருத்துவர் முன்னிலையில் நடைபெறுகிறது
குடல் புற்றுநோய் தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் டோனி தில்லான் தலைமையில் நடைபெற உள்ளது.
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைக் கொண்ட புற்றுநோய் வகையில், குடல் புற்றுநோய் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கு ஆண்டுக்கு 12 லட்சம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 50 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
குடல் புற்றுநோய் தடுப்பூசி குறித்து சர்வதேச அளவில் நோயாளிகளைப் பயன்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரிட்டனின் ராயல் சர்ரே அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் டோனி தில்லான் அண்மையில் அறிவித்தார்.
இந்தத் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் டிம் பிரைஸýடன் இணைந்து கடந்த 4 ஆண்டுகளாக தில்லான் பணியாற்றி வருகிறார்.
இந்தத் தடுப்பூசி குறித்து தில்லான் கூறுகையில், “குடல் புற்றுநோயைப் பொருத்தவரையில் இதுவே முதல் தடுப்பூசி சிகிச்சையாக இருக்கும். இந்தத் தடுப்பூசி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. குடல் புற்றுநோய் பாதித்த நோயாளிகள், இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும்போது முழுமையாகக் குணமடைவர்.
குடல் புற்றுநோய் சிகிச்சையில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோய் பாதிப்பால் நோயாளியின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலத்தின் செயல்திறன் குறையும் நிலையில், இந்தத் தடுப்பூசி நோய்த்தடுப்பாற்றலை அதிகரிக்கும். இதனால், அந்த நோயாளி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையிருக்காது’ என்றார்.
இந்தத் தடுப்பூசியை நோயாளிகளுக்கு செலுத்தும் சோதனைகள் சோதனைகள் பிரிட்டனில் 4 இடங்களிலும் ஆஸ்திரேலியாவில் 6 இடங்களிலும் நடைபெற உள்ளன. உலகளவில் பதினெட்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பரிசோதனை மொத்தம் 44 நோயாளிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.