தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்
மயிலாடுதுறை அருகே தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ந.கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழக அரசு நீட்டித்துள்ளது.ஏற்கனவே அரசு பள்ளிகள் 30 ஆயிரத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்
நேற்று முதல் கூடுதலாக 3995 கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு துவக்கப்பட்டுள்ளது.
21 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் முனைவர் ந.கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உணவின் தரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்த இயக்குனர் மாணவர்கள் இடையே அமர்ந்து உணவருந்தினார்.
உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மற்ற பள்ளிகளிலும் திடீர் ஆய்வு தொடரும் என்று தெரிவித்தார்.