பிரிட்டனில் பள்ளிகளில் கைப்பேசிக்கு தடை
பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளையும் தருகிறது. குறிப்பாக, அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலனில் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, மொபைல் போன்கள் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, மொபைல் போன்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் இடமாக பள்ளிகள் இருக்கிறது. மொபைல் போன்கள், குறைந்தபட்சம், வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்கும் நமது ஆசிரியர்களுக்கு ஒரு கருவியை அளிக்கிறோம். சிறப்பாக கல்வி கற்று தர இது அவர்களுக்கு உதவுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மொபைல் போன்களுக்கு தடை விதித்து பிரிட்டன் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், “அனைத்து பள்ளிகளிலும் நாள் முழுவதும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வகுப்பறை நடக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில், மொபைல் போன்களின் பயன்பாடு தினசரி மோதலை உருவாக்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மொபைல் போன்கள் மீதான தடை நான்கு விதமாக அமல்படுத்தப்பட உள்ளது. ஒன்று, மொபைல் போன்களை மாணவர்கள் வீட்டிலேயே விட்டு செல்வது. இரண்டாவது, பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியர்களிடம் மொபைல் போன்களை கொடுத்துவிடுவது. மூன்றாவது, பள்ளிகளில் பாதுகாப்பான ஸ்டோரேஜில் மொபைல் போன்களை வைப்பது.
நான்காவது, மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் அதை அருகில் வைத்து கொள்ளலாம். புதிய விதிகளை மீறும் மாணவர்கள், பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள். அல்லது தொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.