in

மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது.. வைத்திலிங்கம் எம்பி தகவல்

மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது.. வைத்திலிங்கம் எம்பி தகவல்

புதுச்சேரிக்கு வரும் மத்திய நிதி அமைச்சரிடம் முதலமைச்சர் ரங்கசாமி மின்துறை தனியார்மயமாக்கமாட்டோம் என்ற வாக்குறுதியை பெற அழுத்தம் தரவேண்டும்.வைத்திலிங்கம் எம்பி பேட்டி.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி செய்திகளை சந்தித்தார்…பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுலுக்கு பாஜக தலைவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக புதுவையில் உள்ள 16 காவல்நிலையங்களில் காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளித்துள்ளோம். இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டில் சாட்சியங்களோடு வழக்கு தொடர்வோம். புதுவை மின்துறை லாபகரமாக செயல்படுகிறது.

மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்பதால் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். அதற்கு துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் எனக்கு பதிலளித்துள்ளார். அந்த பதிலில், தேசிய சராசரி மின் இழப்பைவிட புதுவையில் மின் இழப்பு அதிகமாக உள்ளது. தேசிய சராசரி மின் இழப்பு 15.3 சதவீதம். ஆனால் புதுவையில் 17.4 சதவீதம் மின் இழப்பு உள்ளது. இதுதான் நாட்டிலேயே மிக அதிகமான மின் இழப்பு. மின் கட்டணம் மற்ற மாநிலங்களில் 97.27 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. புதுவையில் 92.5 சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுவை மின்துறை நஷ்டம் ரூ.23 கோடியாக இருந்தது. தற்போது 2022-23ம் ஆண்டில் ரூ.131 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் வியாபார ரீதியாக மின்துறையை தனியாருக்கு அளித்து நிர்வாகத்தை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது என மத்திய அமைச்சர் பதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் புதுவை மின்துறையில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக தெரியவந்துள்ளது. மாநில அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, மின் இழப்பையும், நஷ்டத்தையும் உருவாக்குகிறதோ? என்ற சந்தேகம் உள்ளது. நாளைய தினம் மத்திய நிதி மந்திரி புதுவைக்கு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. புதுவை முதலமைச்சர் டெல்லிக்கு செல்ல மாட்டார்.

எனவே புதுவைக்கு வரும் மத்திய நிதி மந்திரியிடம் மின்துறை தனியார்மயமாக்கமாட்டோம் என்ற வாக்குறுதியை பெற வேண்டும். மின் கட்டண உயர்வுக்கான பந்த் போராட்டத்துக்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இன்னும் 6 மாதத்தில் எந்த தேர்தலும் வரும் நிலை இல்லை. புதுவை விழுப்புரம் சாலையில் கண்டமங்கலம் ரெயில்வே பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது, அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பணிகளை முடித்து பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

What do you think?

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. புதுச்சேரி பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

காரைக்கால்..கடற்கரையில் இளம் ஜோடி மிரட்டி மூவாயிரம் ரூபாய் ஜி பெயில் வாங்கிய காவலர்