முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் பிரிவுகளில் குற்றப்பத்திரிகை
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது ஆள் கடத்தல், போலியான ஆவணங்களை உருவாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் 300 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தகவல் செய்யப்பட்டது….
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் M.S.R.ராஜவர்மன் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் எம்.எஸ். ஆர்.ராஜவர்மன் எனப்படும் துரைப்பாண்டியன்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் உட்பட சிலர் கூட்டாக சேர்ந்து பட்டாசு தொழிற்சாலை நடத்துவதாக முடிவு செய்து ஆவணங்களை பதிவு செய்கின்றனர். ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் எம். எஸ்.ஆர்.ராஜவர்மன் உட்பட சிலரும் இணைந்து தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக V.ரவிச்சந்திரன் என்பவரிடம் கூறி தங்களுக்கான தொகையை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ரவிச்சந்திரன் மூவருக்கும் தலா 70 லட்சம் என்ற அடிப்படையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு ரவிச்சந்திரன் மட்டுமே பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கிறார்.
தொழில் நல்லபடியாக நடந்த நிலையில் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பணம் பெற்றுக் கொண்ட ராஜவர்மன் உள்ளிட்ட சிலரும் இணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து ரவிச்சந்திரனிடம் இன்னும் தாங்கள் பங்குதாரராக உள்ளதாகவும் ஆகையால் தங்களுக்கு உண்டான பங்கை பிரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு V.ரவிச்சந்திரன் ஏற்கனவே நீங்கள் செய்த முதலீட்டை வாங்கிக் கொண்டு இப்போது ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என எதிர்ப்பு தெரிவிக்கவே V.ரவிச்சந்திரனை சிவகாசியில் இருந்து கடத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து அடித்து மிரட்டியதாகவும் இச்செயல்களுக்கு அப்போதைய மல்லி சார்பு ஆய்வாளர் முத்து மாரியப்பன் மற்றும் அப்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாகவும் ஆகையால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக சார்பு ஆய்வாளர் முத்து மாரியப்பன் மற்றும் டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்கிடம் ரவிச்சந்திரன் முறையீடு செய்தும்.
இது குறித்து மேல் நடவடிக்கை இல்லாத காரணத்தினால் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் தனக்கு பாதிப்பு ஏற்படுத்திய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் : 2 ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளி மணாளன் V.ரவிச்சந்திரன் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ள காரணத்தினால் குற்றச்செயலில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் கடந்த அதிமுக ஆட்சியின் போது பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மீது ஆள் கடத்தல் போலியான ஆவணங்களை தயார் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய கடந்த வருடம் மார்ச் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் உள்ளிட்ட ஆறு பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆறு பேருக்கும் எதிராக காவல்துறையினர் சுமார் 300 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.