in

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு ‘”செக்”


Watch – YouTube Click

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு ‘”செக்”

மதுரையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, அப்பாவி மக்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது.

ஜாமீனில் வெளிவந்துள்ள இந்த இயக்குநர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துவருவதைத் தடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பொருளதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஏராளமானோர் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியோமேக்ஸ் நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் செய்ததைத் தொடர்ந்து நியோமேக்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டு, அதன் இயக்குநர்கள் வீரசக்தி , கமலக்கண்ணன் , பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். மேலும் அதன் கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது..

இதுவரை 29 பேர் வரை கைது செய்யப்பட்டு, 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டப் பொருளாதாரக் குற்ற சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, நியோமேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு நிலங்களை ஒப்படைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், அந்த நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.

இந்த நிலையில், நியோமேக்ஸ் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள இயக்குநர்கள் கமலக்கண்ணன், சிங்காரவேலன், கபில், செல்வக்குமார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவினரால் தேடப்படும் குற்றவாளிகள் பெயரிலும், அவர்களின் பினாமிக்களின் பெயர்களிலும் பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன.

இந்நிலையில், நியோமேக்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், குற்றாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள நிலங்களை மோசடியாக விற்பனை செய்து வருவதாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இன்று மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில்
நியோமேக்ஸ் நிறுவனத்தினர் ஆசை வார்த்தை காட்டி எங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் மற்றும் நிலத்தினை ஏமாற்றி வாங்கிக்கொண்டனர். இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தால் உங்களுக்கான பணம் மீண்டும் கிடைக்காது எனக் கூறி தொடர்ந்து மிரட்டி வந்ததால், இதுவரை நாங்கள் புகார் அளிக்கவில்லை.

ஆனால், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நியோமேக்ஸ் இயக்குநர்கள் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதிலும் உள்ள நிலங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதோடு, நிலம் வாங்கியும் வருகின்றனர். இதனை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று நேரில் வந்து புகார் அளித்துள்ளோம். புகார் அளித்தால் தங்களது பணம் திரும்பக் கிடைக்காது என நியோமேக்ஸ் முகவர்கள் மிரட்டி வருவதோடு கொலை மிரட்டலும் விடுகின்றனர்.

எங்களது காவல் துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள்தான் பொறுப்பு, ஏமாற்றப்பட்ட எங்களுக்குப் பணத்தை மீட்டுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

ஜாமீனில் வெளியே வந்தபின்பு எந்தவொரு பரிமாற்ற நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையிலும், தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நியோமேக்ஸ் இயக்குநர்கள் விற்பனை செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

வைத்தியலிங்கத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை

வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பூத்தூவி வரவேற்பு